×

மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் சீனியர்களை புறக்கணிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

திருப்போரூர், மார்ச் 22: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்பியான மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் இருவரும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், கட்சியின் சீனியர்களையும், 1991 முதல் எம்எல்ஏவாக இருந்தவர்களையும் இதுவரை சந்தித்து ஆதரவு கேட்காதது, அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் தொகுதியில் கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக ம.தனபால் இருந்தார். பின்னர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2006ம் ஆண்டு மீண்டும் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு மனு செய்து நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனாலும், யாருக்கு சீட் கிடைத்தாலும் வேலை செய்ய தயாராக இருந்தாலும், அவரை யாரும் இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை. கடந்த 2001ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் கணிதா சம்பத். பின்னர் இவர் 2011ல் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் பதவி வகித்தார். கடந்த 2011ம் முதல் 2016ம் ஆண்டு வரை திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் தண்டரை மனோகரன். இவர் கிளைக்கழக செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் பதவிகளில் இருந்தவர்.

கடைசியில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மற்றும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் சீட் கேட்டு மனு அளித்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. திருப்போரூர் தொகுதி முழுவதும் இவருக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அதிமுகவின் கோஷ்டி அரசியல் காரணமாக, இந்த 3 பேரையும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மரியாதைக்கு கூட எட்டிப் பார்க்கவில்லை. தண்டரை மனோகரனால் கட்சிக்கு அழைத்து வரப்பட்ட குமரவேல், திருப்போரூர் ஒன்றிய செயலாளராகவும், அவரது மனைவி மரகதம் எம்பியாகவும் ஆன பிறகு சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருவதாக அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் மாவட்ட செயலாளருமான தண்டரை மனோகரன் கூறுகையில், தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு வேலை செய்ய நான் உள்பட அனைத்து முன்னாள் எம்எல்ஏக்களும் தயாராக இருக்கிறோம். ஆனால், 2 வேட்பாளர்களும் இதுவரை மரியாதைக்கு கூட வந்து சந்திக்கவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கான தகவலும் தரவில்லை. நானே செய்தித்தாள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இப்படி இருந்தால் எப்படி கட்சி வளர்ச்சியடையும் என வேதனையுடன் தெரிவித்தார்.
இன்று திருப்போரூர் தொகுதி மாம்பாக்கத்தில் நடைபெறும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AIADMK ,seniors ,constituencies ,Assembly ,Lok Sabha ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...