×

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலம்

அரியலூர், மார்ச் 22: அரியலூர் பகுதியில் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அரியலூர் பஸ் நிலையம் அருகே விநாயகர் கோயிலிலிருந்து  பால்குடம், வேல், காவடி உள்ளிட்டவைகளை பக்தர்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக முக்கிய சாலை வழியாக வந்து கோயிலை அடைந்தனர். இதனையடுத்து பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்   நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல அரியலூர் அருகே வாலாஜநகரம், ராஜீவ்நகர் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்:  பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வடம் பிடித்து பக்தர்கள் தேர்  இழுத்தனர். விழாவில் பெரம்பலூர், துறைமங்கலம், எளம்பலூர், அரணாரை, கல்யாண்நகர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் இரவு 7 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. ஜெயங்கொண்டம்: விளந்தை அழகு சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர காவடி திருவிழா நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விளந்தையில் சுப்ரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர காவடி திருவிழா நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டு பங்குனி உத்திர காவடி திருவிழா நேற்று நடந்தது. இதைதொடர்ந்து ஆண்டிமடம் காட்டுகேணி குளக்கரையில் வேல், காவடிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கொண்டு ஆண்டிமடம் நான்கு ரோடு, கடைவீதி, மடத்து தெரு, புதுபிள்ளையார் கோவில் தெரு வழியாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Devotees ,Murugan ,temples ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...