×

வாக்காளர்களை கவரும் நோக்கத்தில் பணம், மது, பரிசு பொருள் கொடுத்தால் வேட்பாளர் செலவு கணக்கில் அடங்கும் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் தகவல்

நாகை, மார்ச், 22: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மயிலாடுதுறை தொகுதி செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் சஞ்சய்முகர்ஜி தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் செலவினம், வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை மேற்கொள்ளப்பட்ட செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்காக கருதப்படும். பொதுகூட்டங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வண்டிகள், செய்தித்தாள் அல்லது மின்னணு ஊடகத்தில் விளம்பரங்கள் போன்ற பிரசாரங்களும், வாக்காளர்களை கவரும் நோக்கத்துடன் அவர்களுக்கு பணம், மது அல்லது பரிசு மற்றும் வேறு பொருட்களை வழங்குவதும் வேட்பாளரின் செலவு கணக்கில் அடங்கும். தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின் உண்மையான கணக்கை அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட வாகன பயன்பாட்டிற்கான அனுமதியினை வாகனத்தின் முன்பக்கத்திரையில் காட்சிக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். மேலும் அனைத்து பதிவேடு, தேர்தல் பிரசார காலத்தில் குறைந்தது மூன்று முறையாவது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

அனைத்து பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் வீடியோ படப்பிடிப்பு செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வேட்பாளரின் தேர்தல் செலவினங்கள் குறித்து கண்காணிக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி,  வருமான வரி உதவி இயக்குநர் நாகராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் வேலுமணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்  வெங்கடேசன், பி.ஆர்.ஓ. செல்வகுமார் மற்றும் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்ட மன்ற தொகுதியின் உதவி செலவின பார்வையாளர்களின் பறக்கும் படை அலுவலர்கள், நிலையான ஆய்வுக்குழு அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,voters ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்