×

பூனிமாங்காட்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி, மார்ச் 22: திருவாலங்காடு ஒன்றியம்் பூனிமாங்காட்டில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூனி மாங்காடு காலனியில் தெற்கு தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட 6 தெருக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய கூலி குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று காலை 8 மணியளவில் திருத்தணி-நல்லாட்டூர் சாலையில், பூனி மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 100-க்கும் மேற்பட்ட காலனி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியே வந்த அனைத்து வாகனங்களும் இரு பக்கங்களிலும் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.இது குறித்து தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அப்பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தனர். பின்னர், கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்
பட்டது.

Tags : road ,Galleons ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...