×

கரூர் மாவட்டத்தில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு

கரூர், மார்ச் 22: வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி முறையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கரூர் பாராளுமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 1031 வாக்குச்சாவடி மையங்களும், 6 துணை மையங்களும் என மொத்தம் 1037 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று பேர் நியமிக்கப்படுவார்கள். 1,400க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதனடிப்படையில் மொத்தம் உள்ள 1037 வாக்குச்சாவடி மையங்களிலும் பணிபுரியும் 5028 நபர்களுக்கு கணினி முறையில குலுக்கல் செய்து பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் கணினி முறையில் குலுக்கலை நடத்தினார். இதனடிப்படையில் 5028 நபர்களுக்கும் நேற்று முதல் அவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மார்ச் 24ம் தேதி அன்று மண்டல அலுவலர்கள் மூலம் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதன்படி கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் மேலாண்மை கல்லூரியிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, தேர்தல் தாசில்தார் சிவக்குமார் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : voting officers ,Karur district ,
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை