பல்லாவரம் அமமுக கட்சியினரிடையே மோதல்: வைரலாகும் வீடியோ காட்சியால் பரபரப்பு

சென்னை: பல்லாவரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் அமமுக கட்சியை சேர்ந்த ஒருவரை, அதே கட்சியை சேர்ந்த பல்லாவரம் நகரசெயலாளர் சிங்காரம் ஆவேசமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அமமுக கட்சியின் பல்லாவரம் நகர செயலாளராக இருப்பவர் சிங்காரம்(52) மற்றும் துணை செயலாளராக இருப்பவர்  ஆனந்தகுமார்(33) இருவரும் சேர்ந்து,  அதே கட்சியை சார்ந்த பல்லாவரம் 7-வது வட்ட செயலாளரும், பல்லாவரம் குளத்தமேடு பகுதியில் வசித்து வருபவரான கலைச்செல்வன்(42) என்பவரை கடந்த இரு தினங்களுக்கு முன் ஜாதி பேரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்ட கலைச்செல்வனை,பல்லாவரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அலுவலகத்திற்கு வருமாறு சிங்காரம் வரவழைத்தார். அவ்வாறு வந்த கலைச்செல்வனை எப்படி நீ எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்று சிங்காரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே   வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றி கை கலப்பாக மாறியது. இதில் பல்லாவரம் நகரசெயலாளர்  சிங்காரம், கலைசெல்வனை பிடித்துக்கொள்ள, துணை செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் வாசுதேவன் (39) உள்ளிட்ட அக்கட்சினர் சேர்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைச்செல்வன் மீது  கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.

 

அருகில் இருந்த மற்ற நிர்வாகிகள் சண்டையை விலக்கி விட முயன்றும், விடாமல் அவர்கள் இருவரும் சேர்ந்து கலைச்செல்வன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.இதில் கலைச்செல்வன் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இந்த சண்டைக் காட்சிகளை அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை  சமூக வலைதளங்களில் உலா விட்டுள்ளனர். இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நேரத்தில், அமமுக கட்சியினர், இப்படி பொது இடத்தில் ஒருவரை, ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

Related Stories: