இந்த 5 ஆண்டு காலத்தில் மோடி அரசால் மக்கள் பாதிப்பு: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

சென்னை: இந்த 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொருவரும் மோடி அரசால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளதாக தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லிவாக்கத்தில் நேற்று நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீரசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது: இந்த 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மோடி அரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்களும் உங்கள் சொந்தக்காரங்களும், மகன்களுக்கும்  வேலை வாய்ப்பு கிடையாது. பிஎஸ்என்எல் மூட வேண்டியதாச்சு. ஏதாவது ஒரு வழியில்  பார்த்தீர்கள் என்றால் அனைவரும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மக்கள் பிரச்னை அல்ல. இது நமது  பிரச்னை என்று எடுத்து கட்சியினர் அனைவரும் செயல்படுங்கள். இதை சொன்னாலே போதும்.  கண்டிப்பாக வெற்றி உறுதி. வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்த முறை அதிக எண்ணிக்கையில்  நாடாளுமன்றத்துக்கு நாங்கள்  சென்றால் தான் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியும். இங்கே கவர்னரை வைத்து  எப்படி எல்லாம் ஆட்டம் போட்டார்கள். எல்லாவற்றையும் வழக்கு போட்டு தான் ஜெயிக்க வேண்டிய நிலை தான் இருந்தது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ரங்கநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், அரும்பாக்கம் வீரபாண்டியன்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜெய்னுல் ஆபிதின், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ந.செல்லத்துரை மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: