×

அரிய வகை மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்தக்கசிவுடன் ஆபத்தான நிலையில் வந்த பீகார் சிறுவனுக்கு மறுவாழ்வு அரசு டாக்டர்கள் சாதனை

வேலூர், மார்ச் 22: அரிய வகை மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ரத்தக்கசிவுடன் அனுமதிக்கப்பட்ட பீகார் சிறுவனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிகிச்சை மூலம் மீட்டெடுத்து சாதனை படைத்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த அசூர் ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெத்தேந்தர் பர்மன். இவர் தனது ஊரை சேர்ந்த 10 குடும்பங்களை சேர்ந்தவர்களுடன் வேலை தேடி திருப்பூருக்கு ரயிலில் வந்தனர். வழியில் அவரது 5 வயது மகன் ராகுலுக்கு காய்ச்சலுடன் வலிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஆம்பூர் தாண்டி ரயில் சென்ற போது சிறுவனுக்கு காய்ச்சல் கடுமையானதுடன், மூக்கில் ரத்தம் வழிந்ததுடன், மீண்டும் வலிப்பும் வந்து மயங்கியுள்ளான். இதனால் செய்வதறியாது தவித்த ஜெத்தேந்தர், மனைவி குழந்தையுடன் வாணியம்பாடியில் இறங்கி, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்றார். அங்கு ராகுலை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் அபாயக்கட்டத்தில் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வேலூர் அழைத்து வரப்பட்ட சிறுவனை மருத்துவக்கல்லூரி டீன் சாந்தி மலர் மேற்பார்வையில், குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் தேரணிராஜன் தலைமையில், உதவி பேராசிரியர்கள் டாக்டர் பிரகாஷ், டாக்டர் சாய்லட்சுமி உட்பட மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். இதில் சிறுவன் அரிய வகை வைரஸால் ஏற்படும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனால் நேற்று காலை சிறுவன் ராகுல் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளான். இன்னும் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் ராகுல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவான் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர் தேரணிராஜனிடம் கூறுகையில், ‘ரத்தக்கசிவுடன், வலிப்பு, காய்ச்சலுடன் வந்த சிறுவனை பரிசோதித்தபோது, அவன் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. ஆனால், எந்த வகை என்றே கண்டறிய முடியாத வைரஸால் சிறுவனுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. அதனால் அவனது கண்பார்வையும் மங்கி போனதுடன், நடக்கவும் முடியவில்லை. 10 நாட்கள் தொடர் சிகிச்சையால், ராகுல் படிப்படியாக குணமடைந்தான். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தாலும் முடியாது என்றுதான் கூறியிருப்பார்கள். அந்த நிலையில் வந்த சிறுவன் தற்போது பிழைத்துள்ளான். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவான்’ என்றார்.

Tags : government ,Bihar ,state doctors ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!