×

காலதாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமானது உள்துறை செயலாளருக்கு நளினி கடிதம்

* அமைச்சரவை முடிவை செயல்படுத்த கோரிக்கை * விடுதலை செய்யக்கோரி இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்


வேலூர், மார்ச் 22: தன்னை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை உடனடியாக செயல்படுத்த கோரி உள்துறை செயலாளருக்கு நளினி கடிதம் எழுதி உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனித்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நளினி தமிழக உள்துறை செயலாளருக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன். என்னையும், என்னுடன் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் என் கணவர் முருகன் உட்பட 6 பேரையும் முன்விடுதலை செய்ய 161 விதியின் கீழ் கடந்த ஆண்டு 9.9.2018 அன்று தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

அமைச்சரவையின் முடிவை ஆளுனரின் கையெழுத்துக்காக அனுப்பியது. ஆனால் கடந்த 5 மாதங்களாக அமைச்சரவை முடிவின்படி எங்களை விடுதலை செய்யவில்லை. தற்போது 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த ஆயிரக்கணக்கான நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், நாங்கள் சிறையில் 28 ஆண்டுகள் கழித்துள்ளோம். காலதாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமானது. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை கருதி தமிழக அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த கடிதத்தை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி சிறைத்துறை மூலம் நேற்று உள்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ளார். மேலும் தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Home Secretary ,
× RELATED 38 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு: உள்துறை செயலாளர் உத்தரவு