×

ஆரணி அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் நீதிபதி விசாரணை

ஆரணி, மார்ச் 22: போளூர் அடுத்த அரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்துவிட்டதால், அதே கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, அருகில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கும் போளூர் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(எ) ராஜாவுக்கும் வரும் 24ம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்திக்கு கலெக்டர் உத்தவிட்டார்.

அதன்பேரில், சேத்துப்பட்டு ஒன்றிய மகளிர் ஊர்நல அலுவலர் விஜயா, ஆரணி ஒன்றிய விரிவாக்க அலுவலர் ருக்மணி, சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மஞ்சு, வேலு ஆகியோர் அரியாத்தூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது உறுதியானது. அப்போது அதிகாரிகள் எடுத்துரைத்தும் வரும் 24ம் தேதி சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைப்போம் என அவரது உறவினர்கள் தெரிவித்தார்களாம்.

இதுகுறித்து, மகளிர் ஊர்நல அலுவலர் விஜயா நேற்று ஆரணி சார்பு நீதிபதி எழில் வேலவனிடம் புகார் செய்தார். அதன்பேரில், சார்பு நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலட்சுமி ஆகியோர் உடனடியாக அரியாத்தூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதிகள், சிறுமி திருமணம் நடத்தக்கூடாது. 18 வயது பூர்த்திய ஆன பின்னரே திருமணம் நடத்த வேண்டும். மீறி திருமணம் நடத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இருவீட்டாருக்கும் எச்சரிக்கை விடுத்து, திருமணத்ைத தடுத்து நிறுத்தினர். மேலும், ஆரணி நீதிமன்றத்தில் இன்று சிறுமியை ஆஜர்படுத்த, அவர்களது உறவினர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, ஆரணி வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை உடனிருந்தார்.

Tags : Ariane ,
× RELATED ஆரணி அருகே விபத்து எஸ்ஐ கார் மோதி...