துரைப்பாக்கம் முதல் பல்லாவரம் வரை மரங்களை அகற்ற மக்கள் எதிர்ப்பு: புதிய மரக்கன்றுகள் நட கோரிக்கை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை சாலையோர மரங்களை அகற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய மரக்கன்றுகளை நடவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  சென்னை துரைப்பாக்கம் 200 அடி சாலை துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து ஆரம்பமாகி பல்லாவரம் வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே இருந்து பல ஏக்கர் சதுப்பு நிலம் உள்ளது. இந்த நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை இருபுறமும் 100க்கும் மேற்பட்ட  பலவகை மரங்கள் உள்ளன. இச்சாலையில் மரங்கள் உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை  மரத்தின் நிழலில்விட்டு சிறிது நேரம் இளைப்பாறி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாலையோரத்தை சுத்தம் செய்வதாகவும் மரக்கிளைகளை உடைப்பதாகவும் கூறி வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள பெரும்பாலான மரங்களை வேறோடு அகற்றி வருகின்றனர். இதனால் இங்குள்ள மரங்களில் தங்கி இருந்த பலவகை பறவைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதுகுறித்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மரங்களை அகற்ற வேண்டாம் எனவும் கூடுதலாக  மரக்கன்றுகளை சதுப்பு நில பகுதியில் வைக்க புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: