×

திருவண்ணாமலையில் பக்தர்கள் 2ம் நாள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி பக்தர்கள் தொடர்ந்து 2ம் நாளாக கிரிவலம் வந்தனர்.  திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி இந்தமாத (பங்குனி) பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் காலை 11.41 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமி தொடங்கிய நேரத்திலிருந்து பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களே காணப்பட்டனர்.

அதேபோல், 2வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை வழிபட்டனர். வழக்கம்போல கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில், எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags : devotees ,Thiruvannamalai ,Pournami Giriavalam ,
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...