×

வாக்குப்பதிவு நாளன்று தொலை தூரத்தில் தேர்தல் பணியா?

சிவகங்கை, மார்ச் 21: ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி அளிக்கக்கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.18ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கள் வாக்கு உள்ள வாக்குச்சாவடி தவிர்த்து அருகாமையில் உள்ள பிற வாக்குச்சாவடிகளில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வருவதற்கான வாகன ஏற்பாடு செய்திருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த தேர்தல்களில் பல ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படாததால் வாக்களிக்க இயலவில்லை. எனவே தற்போது அனைத்து ஆசிரியர்களும் வாக்களிக்க ஏதுவாக முன் கூட்டியே தபால் வாக்குகள் அளிக்க வேண்டும் அல்லது தாங்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வசதியாக பணிச்சான்று அளிக்கப்பட வேண்டும். உடல் நலம் குன்றியோர், மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்துள்ளோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயது முதிர்ந்த ஆசிரியர், காரணம் கூற இயலாத பெண் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளித்து, கட்டாய தேர்தல் பணி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கடந்த காலங்களில் வருவாய் துறை அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்தியதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. அவ்வாறு இத்தேர்தலில் நடக்காதவண்ணம் உரிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வருவாய்த்துறை மற்றும் உயர் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தாங்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியை எளிதில் அறிந்துகொள்ள வசதியாக நடைமுறைகளை எளிதாக்குவதோடு, பணி ஆணையையும் முன் கூட்டியே வழங்க வேண்டும். தேர்தலை எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் உரிய வழிகாட்டுதல் அளிப்பதோடு முன்கூட்டியே வட்டார அளவில் கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களின் பிரச்சனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்