×

கல்வியை தாரை வார்க்கும் தமிழக அரசு அரசு பள்ளிகளில் தொடர்ந்து குறையும் மாணவர் சேர்க்கை

பரமக்குடி, மார்ச் 21: தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் என்ற பெயரில் தனியாருக்கு கல்வியை தாரை வார்க்கும் அரசால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளிகள் பல மடங்கு அதிகரித்து விட்டது. எல்.கே.ஜி முதல் எம்.பி.பி.எஸ் வரை தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி விட்டது. குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விட்டது. தங்களது ஆசிரியர் பணியினை காப்பாற்றி கொள்வதற்காக மாணவர்களை தேடி பிடித்து சேர்த்து வருகின்றனர்.

தமிழக அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் சேரவேண்டிய 1.25 லட்சம் மாணவர்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு இதுவே காரணமாக உள்ளதை மறைத்து விட்டு ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்வது ஏற்றுகொள்ள முடியாது என கல்வியாளர்கள் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மாவட்ட நிர்வாகம் மிகப்பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையை கைவிட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலால் அரசு பள்ளியின் தரத்தை குறைக்கும் செயலாக அமைகிறது. ஆகையால் உடன் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தையும், மாவட்ட நிர்வாகத்தினர் தனியார் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். ஆங்கில வழி கல்வியை குறைந்து தமிழ்வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...