×

விபத்து ஏற்படுவதை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 21: ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பில் ரவுண்டான அமைத்து விபத்தை தடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை போன்ற திருத்தலங்களுக்கும், தேவிபட்டினம் போன்ற நவபாசான தலத்திற்கும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருகின்றனர். இதுபோல் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பேர் ராமேஸ்வரம் போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்வதற்கு இந்த சாலை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆர்.எஸ்.மங்களத்திற்கு செல்வதற்கு பிரிந்து செல்லும் இடத்தில் வாகனங்கள் திரும்பும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு ஒரு ரவுண்டானாவை அமைக்க வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலை இப்போது அதிகமான போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறி விட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் திரும்புவதாலும், எதிர்வரும் வாகனங்கள் தெரியாததாலும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உதாரணமாக திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே  சென் றுவிட்டு திரும்பி செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பேருந்து நிலையத்திற்கு சென்று வந்த பஸ்கள் அல்லது வேறு வாகனங்களை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பும் பொழுது எதிர்பாராதவிதமாக விபத்துகள்  ஏற்பட்டு விடுகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...