×

காட்சி பொருளான ஹைமாஸ் விளக்கால் இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்

கீழக்கரை, மார்ச் 21: கீழக்கரையில் புதிய பஸ் ஸ்டாண்டு, கிழக்குத் தெரு ஜங்சன், கஸ்டம்ஸ் ரோடு ஆகிய மூன்று இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  கீழக்கரையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டு, மேலத்தெரு, கிழக்குத்தெரு ஜங்சன், கஸ்டம்ஸ் ரோடு, மீன்கடைத் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட 9 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 6 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பழுதடைந்து இருந்தது. இதை சரி செய்ய வேண்டும் என்று மக்கள் நல பாதுகாப்பு கழகம், நுகர்வோர் நலச்சங்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து 6 ஹைமாஸ் விளக்குகளையும் பழுது நீக்க தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து பழுது நீக்கி எரிய விட்டனர்.

இதில் புதிய பஸ் ஸ்டாண்டு, கிழக்குத்தெரு ஜங்சன், கஸ்டம்ஸ் ரோடு ஆகிய மூன்று இடங்களில் மட்டும் பழுது நீக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அறுந்து விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. புதிய பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு எரியாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பெண்கள் பஸ் ஏற வருவதற்கு அச்சப்படுகின்றனர். அதேபோல் கிழக்கு தெரு ஜங்சனில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் அதிகாலையில் பள்ளிவாசலுக்கு செல்லும் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வரமுடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் கஸ்டம்ஸ் ரோட்டில் விளக்கு எரியாததால் அதிகாலையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கையில் டார்ச்லைட் இல்லாமல் செல்ல முடியவில்லை. ஆகவே உடன் நகராட்சி நிர்வாகம் எரியாத ஹைமாஸ் விளக்குகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை