×

கடன் தள்ளுபடி வேண்டாம் விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினாலே போதும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி

தஞ்சை, மார்ச் 21: கடன் தள்ளுபடி வேண்டாம். விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினாலே போதும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். தஞ்சையில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் கட்சிகள் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு ஆதாயத்தை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போக்கு நாடெங்கும் வளர்ந்துவிட்டது. வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் கூடிவிட்டனர். பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு கட்சிகள் தள்ளப்பட்டு விட்டன. இதனால் கட்சிகள். கொள்ளையர்களின் கூடாரங்களாகிவிட்டன. இது இந்திய ஜனநாயகத்துக்கு வந்திருக்கும் பேராபத்து. சுதந்திரத்தின் விலை மக்களுடைய விழிப்புணர்வு என்ற அடிப்படையில் வாக்காளர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் திருப்பூர் தொகுதியில் கொள்கை வேட்பாளராக கதிரேசன் நிறுத்தப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகரம் பல மாநில மக்கள் வசிக்கும் பகுதி. பல நாட்டவர் வந்துபோகும் இடம். எனவே இந்த தொகுதியில் கொள்கை வேட்பாளராக நிறுத்துவது பொறுத்தமானது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது மக்கள்தொகை பெருக்கம். காடுகளின் அழிவும், கான்கிரீட் காடுகளின் பெருக்கமும் கூடிப்போனது. இவற்றை பற்றி அரசியல் கட்சிகளும், அரசுகளும் வாய் திறக்க மறுப்பது உள்நோக்கம் கொண்டது. அடுத்த தலைமுறை பற்றிய சிந்தனை இல்லாதது. விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்துவதே பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தரும். இலவசம், மானியம், கடன், கடன் தள்ளுபடி போன்றவை தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் விடுக்கும் சவாலாகும். சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசுகள் செயல்படுத்துவதுபோல விவசாய கமிஷன் பரிந்துரையையும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். வாழ்க்கை தரத்தையும், வாங்கும் சக்தியையும் கூட்டும். தற்கொலைக்கும் இதுவே தீர்வாக அமையும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

Tags : Operations Coordinator ,Agricultural Commission ,
× RELATED ஊழல் பிடியில் அதிமுக சிக்கியதால்...