×

சென்னை விமான நிலையத்தில் 2.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.8 கிலோ தங்கத்தை சுங்க அதிகரிகள் சோதனை மூலம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இளம்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம் பெண் பயணியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால், அவரிடம் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் பெண் அதிகாரிகள் துணையுடன் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தியபோது அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மொத்த எடை 900 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 28 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேப்போன்று நேற்று காலை 8.30 மணிக்கு மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் ஒரு குழுவாக வந்த மதுரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா (45), சென்னையை சேர்ந்த இப்ராகிம் (41), ஷாகுல் (38) ஆகிய 3 பேரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்த ஏசி மிஷினில்  உருளை வடிவிலான 1.9 கிலோ எடை கொண்ட 3 தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 62 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரையும் கைது செய்த சுங்க அதிகார்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நடந்த இரண்டு சோதனையில் 90 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* வேளச்சேரியை சேர்ந்தவர் நாகலட்சுமி (48). நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து மினி பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம் சென்றதும் நாகலட்சுமியின் கைப்பை கிழிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பையை சோதனை செய்தபோது மர்ம நபர்கள் பைக்குள் வைத்திருந்த 6 சவரன் நகையை திருடியது தெரிந்தது. இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* அண்ணாநகர், மடுவங்கரையை சேர்ந்தவர் பிரபு (25). கால்டாக்சி டிரைவர். நேற்று முன்தினம் இரவு பிரபு வேலை முடிந்து ஏ.எச் பிளாக் வழியாக நடந்து வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவரை வழி மறித்து 6 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* ஆதம்பாக்கம், நியூகாலனியை சேர்ந்தவர் ஜெகதீஸ்ராம் (36). தனியார் நிறுவன ஊழியர்.  நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் தூங்கினர். காலையில் எழுந்து வந்த ஜெகதீஸ்ராம்  அறையில் இருந்த பீரோ ஜன்னலோரம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பீரோவை திறந்து பார்த்தபோது ஜன்னலின் அருகே வைத்திருந்த இருந்த சாவியை எடுத்து அதில் வைத்திருந்த 30 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெகதீஸ்ராம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீரோ புல்லிங் ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* விருகம்பாக்கம், சாலிகிராமம் மதியழகன் தெருவை சேர்ந்த ஜெயகுமாரி (40) என்பவர் நேற்று தனது மகள் திருமணத்திற்காக நகை வாங்க 40 ஆயிரம் பணத்துடன் சின்மயா நகரில் இருந்து பஸ்சில் அண்ணாநகருக்கு சென்றபோது அந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

* பெசன்ட் நகர் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த சரவணன்  (48) என்ற மீனவர் நேற்று காலை எலியட்ஸ் கடலில் குயளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தத்தளித்தார். உடனே மீனவர்கள் இறங்கி அவரை மீட்டபோது ஏற்கனவே இறந்தது தெரிந்தது.

* ஆதம்பாக்கம், சுரேந்தர் நகர், 2வது தெருவை சேர்ந்த ஆதித்யா (18) என்ற கல்லூரி மாணவரின் செல்போனை கடந்த 9ம் தேதி பறித்த வேளச்சேரியை சேர்ந்த வசந்தகுமார் (20), பல்லாவரத்தை சேர்ந்த ஸ்டீவ் ஆலன் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

* தி.நகர், சாரங்கபாணி தெருவை சேர்ந்த சிவசங்கர் (47) என்பவர் வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தபோது அந்த காரின் கண்ணாடியை உடைத்ததாக அதே பகுதி ராஜி (எ) ராஜசேகர் (29) என்பவரை பாண்டிபஜார் போலீசார் கைது செய்தனர்.

Tags : Chennai Airport ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்