மாவட்டத்தில் இதுவரை ரூ.46.52 லட்சம் பறிமுதல்

திருப்பூர்,மார்ச்21:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி 22 லட்சத்து 8 ஆயிரத்து 921 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 11 லட்சத்து 60 ஆண்களும், 11 லட்சத்து 8 ஆயிரத்து 617 பெண்களும், 244 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். 2 ஆயிரத்து 497 மொத்த வாக்கு சாவடிகளில் 376 பதற்றமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், இதர வகைகள் என 9 ஆயிரத்து 265 பொது இடங்களில் உள்ளதையும், 4 ஆயிரத்து 273 தனியார் இடங்களில் உள்ளதை அகற்றினர். திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுக்களால் அதிரடி ஆய்வில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.46 லட்சத்து 52 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.ஒரு லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் திரும்பி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனி லோகோ உருவாகப்பட்டு பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உடுமலை: மடத்துக்குளம் அருகே சோழமாதேவி ஊராட்சி கணியூர் சாலையில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்த மணிகண்டன் என்பவர் ரூ.60,640 வைத்திருந்தார். தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் ஆவணங்கள் இல்லாததால், உதவி பொறியாளர் சுனில் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து, மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அருள்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மடத்தக்குளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: