அமராவதி சர்க்கரை ஆலையில் பாய்லர் சூடேற்றும் விழா

உடுமலை,மார்ச்  21:  உடுமலை அருகே மடத்துகுளம் ஒன்றியத்தில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில்  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆண்டு தோறும் மார்ச்  மாதம் கரும்பு அரவை துவங்கி செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும். இந்த  நிதியாண்டுக்கான அரவை துவக்க விழா 25ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி  நேற்று இளஞ்சூடேற்றும் விழா என்ற பாய்லரை சூடேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் சிதம்பரம் தலைமை  தாங்கினார். தலைமை கரும்பு பெருக்கு அலுவலர் சுப்புராஜ் முன்னிலை  வகித்தார். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க  தலைவர் வேலுச்சாமி,செயலாளர் சண்முகேவலு, ஆலை நிர்வாக தலைவர்  சின்னப்பன்,துணை தலைவர் முத்துராமலிங்கம்,விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும்  விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். சர்க்கரை ஆலையை சுற்றியுள்ள பகுதி, பழனி,தாராபுரம், நெய்க்கார பட்டி ஆகிய பகுதிகளில் 3450 ஏக்கர் கரும்பு பயிரிட்டுள்ளனர். சர்க்கரை  ஆலை நடப்பாண்டில் 1 லட்சத்து 35 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு  இந்த ஆண்டு அமராவதி சர்க்கரை ஆலை இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: