அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் புரோக்கர்கள்

திருப்பூர்,மார்ச்21:  அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் புரோக்கர்கள் மீது, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள தலைமை அரசு தலைமை மருத்துவமனையில், தினமும், உள் மற்றும் புறநோயாளிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில் சமீப காலமாக புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவில், மருத்துவமனை ஊழியர்கள் போல திரியும் இவர்கள், நோயாளி மற்றும் அவர்களது உறவினர்களை அணுகி, விரைவான சிகிச்சை பெற உதவுவதாக கூறி பணம் கேட்கின்றனர்.மேலும், ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை, எக்ஸ்-ரே போன்ற பிரிவுகளில், எப்போதும் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு எளிதாக கூட்டி செல்வதாகவும் கூறி பணம் பறிக்கின்றனர்.மருத்துவமனை பணியாளர்களும் இதுபோன்ற நபர்களை கண்டுகொள்வதில்லை. இதுதவிர, மருத்துவமனையின் உள்நோயாளிகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு கூட்டி செல்லும் வேலைகளிலும் புரோக்கர்கள் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நபரை, புரோக்கர்கள் சிலர் இடைமறித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக இறந்தார். புரோக்கர்களின் இதுபோன்ற செயல் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: