×

பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் ஊருக்குள் புகுந்த யானைகள்

குன்னூர், மார்ச் 21: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனப்பகுதியில் யானை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீரை தேடி செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
 நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் நீர், நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இதனால் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் சுற்றிதிரிகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு யானைகள் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் யானை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் அவை செல்ல வழியின்றி தவித்து வருகின்றன. குரும்பாடி பகுதியில் உள்ள தனியார் காட்டேஜ் பகுதியில் யானைகள் சுற்றிதிரிவதால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

மேலும் கூட்டத்தில் இருந்து ஆண் யானை தனியாக சுற்றி திரிவதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யானை அருகே சென்று புகைப்படம் எடுப்பது, கூச்சல் போடுவது போன்ற இடையூறுகள்  செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Tags : city ,road ,
× RELATED மெட்ரோ ரயில் பணி காரணமாக நாளை முதல்...