×

கோடை சீசன் துவங்கியுள்ளதால் தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணி தீவிரம்

ஊட்டி, மார்ச் 21: கோடை சீசன் துவங்கிய நிலையில் தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா தலங்களில் விளையாட்டு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் சரி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.    கோடை சீசனான மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் காணப்படுவர். இதனால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், கடும் அவதிப்படுவார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில் விளையாட்டு பொருட்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
 இதில் படகு இல்லத்தில் பழுதடைந்த படகுகள் சீரமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் நடைபாதை சீரமைப்பு, தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்த நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பார்க்கிங் வசதிகள் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், வார இறுதி நாட்களில் ஊட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை உள்ளது.

Tags : summer season ,botanical garden ,
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்