×

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் ஊட்டி வருகிறது

ஊட்டி, மார்ச் 21: நீலகிரி மக்களவை தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 5 கம்பெனி துணை ராணுவத்தினர் ஊட்டி வரவுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், 40 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளுக்கு தமிழக போலீசாரை மட்டும் பயன்படுத்த முடியாது. எனவே, தேர்தல் ஆணையம் தமிழக போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவ படையினர் மற்றும் தொழிற் பாதுகாப்பு படையினரை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக இம்மாதம் இறுதிக்குள் 5 கம்பெனிகள் ெகாண்ட 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் வர உள்ளனர். இதற்கிடையில், தற்போது வாகன தணிக்கை, சோதனை சாவடிகளில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   இதில் வாகன தணிக்கையில் ஈடுபடும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு படையுடன் இணைந்து துணை ராணுவ படையினர் பணியாற்ற உள்ளனர். மேலும், சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் வாகன தணிக்கைகளில் உள்ளூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட குழு இடம் பெற்றுள்ளது.   இதுகுறித்து நீலகிரி எஸ்பி., சண்முகப்பிரியா கூறியதாவது: நீலகிரி மக்களவை தொகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக 5 கம்பெனி மத்திய படையினர் கேட்கப்பட்டுள்ளது. இவர்கள், இம்மாதம் இறுதியில் வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து, தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், என்றார்.

Tags : forces ,
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படதை...