கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோடு, மார்ச் 21:  கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி விரைவில் துவங்கப்பட உள்ளது. ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளுடன் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.  இதுகுறித்து மேலாண்மை நிலைய துணைப்பதிவாளரும், முதல்வருமான மணி கூறியதாவது:நகைக்கடைகளிலும், அடகு கடைகளிலும், வங்கிகளிலும் தங்கநகை அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. தங்கத்தை மதிப்பீடு செய்து அதன் தரத்தை கண்டறிய வேண்டியது மிகவும் அவசியம்.. இதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சி கட்டாயம் தேவை.  இளைய தலைமுறையினர் தங்கத்தை பற்றிய விழிப்புணர்வு பெறவும், இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறவும் சுயதொழில் வழங்கவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விபரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்தும், அழிக்காமலும் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நடைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறைச்சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் வகுப்பறை பயிற்சியாக வழங்கப்படுகிறது.

பயிற்சியின்போது தங்கநகை தரம் கண்டறிய தேவையான 500 ரூபாய் மதிப்புள்ள உரைகல், லென்ஸ் போன்ற உபகரணம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழை பதிவு செய்து கொள்ளலாம்.  பயிற்சியை முடித்தவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், நகை கடன் வழங்கும் தனியார் நிதிநிறுவனங்கள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்ற வாய்ப்புள்ளது. மேலும், சுயதொழிலாக நகை அடகுகடை, நகைக்கடை, நகை வணிகம் போன்றவற்றை மேற்கொள்ளவும் நல்ல வாய்ப்புள்ளது.

 இந்த பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பத்தையும், மேல் விபரங்களையும் ஈரோடு கொங்கம்பாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: