ஈரோடு நேதாஜி மார்க்கெட் ஒப்பந்ததாரர், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம்

ஈரோடு, மார்ச் 21: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஒப்பந்ததாரர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் நேதாஜி தினசரி காய்கறி மார்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளது. இந்த கடைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடப்படுகிறது.அதன்படி, தற்போதுள்ள ஒப்பந்ததாரர் உரிமம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. ஏப்.1ம் தேதி முதல் வாடகை வசூல் செய்யும் உரிமம் புதிய ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும். இதற்காக, புதிய ஒப்பந்தாரர்கள், வியாபாரிகள், விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒப்பந்தாரர் அருண்பிரசாத், குறிஞ்சி சிவக்குமார், குறிஞ்சி தண்டபாணி, வழக்கறிஞர் ரமேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் சண்முகவேல் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு வசதிகளை செய்து கொடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: