வடக்கஞ்சேரியில் யானைகள் நடமாட்டம்

பாலக்காடு, மார்ச் 21: பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே உள்ள கிழக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்ஜான்சன்(52). இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு தென்னை, வாழை உள்ளிட்டவை பயிரிட்டு பராமரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் தென்னை மற்றும் வாழைகளை சேதப்படுத்தியது. இதுகுறித்து ஜான்சன் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மேலும் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், மலையோர கிராமங்களான வடக்கஞ்சேரி, கிழக்கஞ்சேரி, நெம்மாரா, பீச்சி, மங்கலம் டேம், போத்துண்டி போன்ற இடங்களில் தண்ணீர் மற்றும் உணவை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது.  இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: