தேர்தல் வந்து விட்டதால் திடீர் காதுகுத்து, பெயர் சூட்டு விழா

திருப்பூர்,  மார்ச் 21: திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி  பொறுப்பாளர்களின் இல்லங்களில் திடீர் காதுகுத்து, மொட்டை அடித்து பெயர்  சூட்டு விழா ஆகியவை தினமும் நடக்க உள்ளதால் பல்வேறு கட்சி தொண்டர்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம்  18ம் தேதி நடக்கிறது. பொது தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை  விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்கள்  தொண்டர்கள்,பொது மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய கட்சி பொறுப்பாளர்களின் இல்லங்களில் உள்ள  குழந்தைகளுக்கு காதுகுத்து, மொட்டை அடித்து பெயர் சூட்டுவது, கர்ப்பிணி  பெண்களுக்கு வளைகாப்பு ஆகிய நிகழ்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதற்காக  திருமண மண்டபங்களை முன்பதிவு செய்து கறிவிருந்து, உற்சாக பானம்,  கைச்செலவுக்கு பணம் வழங்கி தொண்டர்களை உற்சாக படுத்த திட்டமிட்டுள்ளனர்.  இதற்காக பல்வேறு மண்டபங்களை பல்வேறு அரசியல் கட்சியின் முக்கிய நபர்கள்  முன்பதிவு செய்துள்ளனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் செயல்களால் வரும் 28  நாட்களுக்கு தொண்டர்களுக்கு தொடர்ந்து கறிவிருந்து மற்றும் உற்சாகபானம்  கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.  சுபநிகழ்வுகளில்  மொய் பணம் எழுதி வாங்குவது வழக்கம். தேர்தலுக்காக திடீர் காத்து குத்து,  மொட்டை அடிப்பது, பெயர் சூட்டுவிழா மற்றும் வளைகாப்பு ஆகிய நிகழ்வுகளில்  கலந்துகொள்ளும் உறவினர்கள், நண்பர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பும்  நிகழ்வுகள் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சியனரின் போலி விழாக்களை  போலீசார், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென  சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: