மாஜி நர்ஸ் கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை

கோவை, மார்ச் 21:கோவையில் ஓய்வு பெற்ற நர்சை கழுத்து அறுத்து கொன்று 6 பவுன் நகை திருடிய மிளகாய் பொடி டெக்னிக் தெரிந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.  கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜயானந்தன் (83). இவர் மனைவி மேரி ஏஞ்சலின் (73). இவர், சென்னை அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். ஒருவர்  சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வசிக்கின்றனர். விஜயானந்தன் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  மேரி ஏஞ்சலின் தனது கணவருடன் 10 ஆண்டாக வேளாங்கண்ணி நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டின் அருகே மற்றொரு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். வீடு தற்போது காலியாக இருந்தது. கடந்த 18ம் தேதி இரவு 35 வயது அந்த நபரும், ஒரு பெண்ணும் வீட்டை வாடைக்கு கேட்டு வந்தனர். வாடகை வீட்டை காட்ட சொல்லி அழைத்து சென்று கழுத்தறுத்து கொன்று 6 பவுன் நகை பறித்து தப்பினர்.

 கொலை செய்த பின்னர் அவர்கள் வீட்டிற்கு மிளகாய் பொடி தூவி சென்றது தெரியவந்துள்ளது. திருடும் நபர்கள் மிளகாய் பொடி தூவினால் மோப்ப நாயால் அடையாளம் காண முடியாது. மேலும் ரத்த தடயங்களை மறைக்க மிளகாய் பொடி பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. தாக்குதல் நடத்தி திருடும் கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மிளகாய் பொடி டெக்னிக் திருடர்களின் பட்டியல் வாங்கி அதில் சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டிற்குள் சென்ற ஆண், பெண் தவிர மேலும் சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக பீளமேடு போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டிற்கு வெளியே  வீதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களின் முகத்தை அடையாளமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம் பக்கத்தினர், உறவினர் என சிலரிடம் போலீசார் விசாரித்தனர்.

Related Stories: