பறக்கும்படை அதிரடி மாவட்டம் முழுவதும் ரூ.66 லட்சம் பறிமுதல்

கோவை, மார்ச் 21: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட அதிரடியில் கடந்த பத்து நாளில் ரூ.66.79 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.8.39 லட்சம் சிக்கியது.

கோவை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 18ம்தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 30 பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அதிகாரிகள் வீதம் மொத்தம் 180 அலுவலர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் விதிகளுக்கு புறம்பாக, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவை, உடனுக்குடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொண்டுசெல்லப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பிறகு கோவை மாவட்டத்தில் கடந்த 11.3.2019 முதல் வாகன சோதனை நடந்து வருகிறது. நேற்று வரை மொத்தம் பத்து நாட்களில் ரூ.66.79 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 640 மது பாட்டில்கள், ஒரு கைத்துப்பாக்கி, 64 பட்டுச்சேலை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை, அனைத்தும் கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதுபற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், ‘’உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட உடன், கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் பொருட்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பி கொடுக்கப்படும்’’ என்றனர்.இதற்கிடையில், கோவையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.8.39 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: