ெதாடர்ந்து 100 டிகிரியை தாண்டும் வெயில் தகிக்கும் வெப்பத்தால் வீடுகளில் முடங்கிய மக்கள்

சேலம், மார்ச் 21: சேலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக உள்ளதால், உஷ்ணம் தாங்க முடியாமல் பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 100.6 டிகிரியாக பதிவானது. சேலம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலங்களில் உச்ச அளவாக 106 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.ஏப்ரல் மாத கோடையின் தாக்கம், இம்மாதம் மத்திய காலகட்டத்திலேயே துவங்கிவிட்டது. பகல்பொழுதுகளில் தகிக்கும் வெப்பத்தால், இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் ‘கிளவுஸ்’ மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது. இதனால் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். கொளுத்தும் வெயிலால் சேலத்தில் நுங்கு, இளநீர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளன. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் வெப்பநிலை அதிகரிக்க காரணம். மழைப்பொழிவு குறைந்ததாலும் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சேலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்,’’ என்றனர்.

Related Stories: