பறக்கும்படை வாகன தணிக்கை தீவிரம் சேலத்தில் ₹7.94 லட்சம் பறிமுதல்

சேலம், மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தலையொட்டி  நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி சேலத்தில் 32 பறக்கும் படையும் 33 நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதில் ₹50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப் பட்டால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.இதுவரை சேலம் மாவட்டத்தில் ₹83.85லட்சம், 15கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட டவுன் ரயில்நிலையம் பகுதியில் பறக்கும் படை  அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் சோதனை நடந்தது. அப்போது அவ்வழியாக  வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், செவ்வாய்பேட்டையை  சேர்ந்த ஆதேஷ் என்பவர், உரிய ஆவணமின்றி ₹6 லட்சத்து 86 ஆயிரத்தை கொண்டு  வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், வடக்கு தொகுதி தேர்தல் உதவி  அலுவலர் செழியனிடம் ஒப்படைத்தனர்.   இதேபோல், சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கே.ஆர்.தோப்பூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரியான யுவராஜ்(27) என்பவர் ₹1 லட்சத்து 08 ஆயிரத்தை உரிய ஆவணமின்றி எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சாரதாருக்குமணியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: