×

ஓமலூர் நேரு நகர் பகுதியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்

ஓமலூர், மார்ச் 21:  ஓமலூர் 9வது வார்டு நேரு நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.  ஓமலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், 9வது வார்டு நேரு நகர் பகுதி, ஓமலூர் பேரூராட்சியிலேயே மிகவும் பின்தங்கிய புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 6 மாதமாக முறயைாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதியில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. காவிரி குடிநீர் கிடைக்காததால், அங்குள்ள பொது கிணற்று நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அந்த கிணற்றில் தற்போது குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், கிணற்றில் தண்ணீர் எடுக்க போடப்பட்ட மின்மோட்டார் மற்றும் பைப்புகளும் பழுதடைந்து உடைந்த நிலையில் உள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாக்கடைகள் தூர்வாரப்படாததால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இப்பகுதியில் அடிப்படை தேவைகளில் சிலவற்றையாவது பூர்த்தி செய்யாவிட்டால், தேர்தல் நேரத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஓமலூர் செயல் அலுவலர் அசோக்குமார் கூறுகையில், ‘தேர்தல் முடிந்ததும் இப்பகுதியில் பணிகள் செய்து கொடுக்கப்படும்,’ என்றார்.

Tags : Omalur Nehru Nagar ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை