×

காவிரி கரையில் அதிகரிக்கும் மணல் கொள்ளை

நாமக்கல், மார்ச் 21: காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. மோகனூர், பரமத்திவேலூர், பொத்தனூர், பேட்டப்பாளையம், ஒருவந்தூர், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றின் மணலை அள்ளி மாட்டு வண்டி மற்றும் டூவீலர்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மணல் கொள்ளைக்கு வருவாய் துறை மற்றும் போலீசார் துணையாக இருப்பதால் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. மணல் கொள்ளைக்கு எதிராக விவசாய சங்கங்கள குரல் கொடுத்து வந்தாலும் அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. தற்போது, மோகனூர் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், இரவு நேரங்களில் மணல் கொள்ளை சாதாரணமாக நடந்து வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக சென்று விட்டதால், தற்போது மணல் கொள்ளை தடுக்க அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

வருவாய் துறை மற்றும் காவல்துறையினரை மணல் கொள்ளையர்கள் சரிக்கட்டி தினமும் காவிரி ஆற்றிலிருந்து மணலை திருடிச் செல்கின்றனர். பேட்டபாளையம் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு மாதமாக உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூட்டணி அமைத்து பொக்லைன் எந்திரம் மூலம் மணலை லாரிகளில் கடத்திச் செல்கின்றனர்.  இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பொன்னுசாமி கூறுகையில் ‘மோகனூர் காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. ஒரு லோடு மணலுக்கு ஆன்லைனில் புக் செய்தால் லாரி உரிமையாளர்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு மணல் குவாரிகளின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் குறைந்து விட்டது. தற்போது 7 குவாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் தினமும் அதிகமான மணல் கொள்ளை நடந்து வருகிறது. மாட்டு வண்டி, சாக்கு மூட்டை, லாரிகள் என பல வாகனங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது’ என்றார்.
 
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஜெயந்தியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, மணல் கொள்ளையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாலுகா அளவில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரியாமல் மணல் கொள்ளை நடக்காது. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அதிகாரிகள் மட்டுமன்றி பொது மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. மணல் திருட்டு நடப்பதாக அடிக்கடி புகார்கள் வருகிறது, ஆனால், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தால் அங்குள்ள மக்கள் யாரும் சரியான தகவல் தெரிவிப்பது இல்லை. மணல் கொள்ளை எங்கு நடைபெறுகிறது? எப்போது நடைபெறுகிறது? என்பது குறித்து சரியான தகவல் தெரிந்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் எங்களுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு உதவி இயக்குனர் ஜெயந்தி கூறினார்.

Tags : shore ,Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி