×

நகை ஆர்டர் பெற்று தருவதாகக் கூறி ₹4.5 கோடி மோசடியில் 2பேர் கைது

திருச்செங்கோடு, மார்ச் 21: திருச்செங்கோட்டில் ஆர்டர் பெற்று தருவதாக கூறி, நகை கடைக்காரர்களிடம் ₹4.5 கோடி மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தேரடித்தெருவில் நகை கடை நடத்தி வருபவர் பாரத்(27).  இவரிடம் கூட்டப்பள்ளியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார் (எ) பாலமுருகன்(38) என்பவர், நகை ஆர்டர் பிடித்து தருவதாக கூறினார். பின்னர், பார்ட்டியிடம் காண்பித்து விட்டு வருவதாக கூறி, 100 பவுன் நகைகளை வாங்கி சென்றார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லாததால், கடந்த 7ம் தேதி பாலமுருகன் வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு பாரத் கேட்டார். அதற்கு நகைகளை தரமுடியாது என்று கூறிய பாலமுருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து, பாரத் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு டவுன் போலீசார், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பாலமுருகனை தேடி வந்தனர்.

இதனிடையே, தலைமறைவான பாலமுருகனிடம் நகை கொடுத்து ஏமாந்ததாக முருகானந்தம், செல்வம், சுரேந்தர், சத்யமூர்த்தி, ராஜேந்திரன், ரமேஷ், தமிழ்செல்வன்  உள்பட 18 பேரும் போலீசில் புகார் அளித்தனர். புகார்களின் அடிப்படையில்  ₹4.5 கோடி வரை நகைகள், பணம் மோசடி நடந்தது தெரிவந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு பாலமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று கூட்டப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த  அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்ததால் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, பவானியைச் சேர்ந்த மைத்துனர் அருண்குமார்(26) என்பவருடன் சேர்ந்து நகை, பணத்தை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார். அருண்குமார், பாலமுருகனுக்கு தெரியாமல், அவரது வீட்டில் இருந்த 1.24 கிலோ நகைகளை எடுத்துச் சென்று அடகு கடையில் வைத்து, ₹23 லட்சம் பெற்று ஏமாற்றி விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து, பவானி சென்ற போலீசார், வீட்டில் இருந்த அருண்குமாரை கைது செய்து, அவர் அடகு வைத்திருந்த 1.24 கிலோ நகைகளை மீட்டனர். பின்னர், இருவரையும் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நகைகளையும் ஒப்படைத்தனர். நீதிபதி தனம் இருவரையும் 15 நாள் காவலில்  வைக்கும்படி உத்தரவிட்டார்.

Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்