×

லாரிகளில் விற்பனை செய்யும் தண்ணீரில் குளோரின் இல்லை

நாமக்கல், மார்ச் 21: நாமக்கல் மாவட்டத்தில் லாரிகள் மூலம் விற்பனை செய்யும் தண்ணீரில் முறையாக குளோரின் கலப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால்,  மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். விவசாய கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம், தண்ணீர் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் லாரி தண்ணீரில் முறையாக குளோரின் கலக்காததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடைகள் மற்றும் ஹோட்டல்களில் ஆர்ஓ தண்ணீர் என்று, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரிலும் முறையாக குளோரின் கலப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலை உள்ளதால், சுகாதாரத்தை குறித்து பலர் கவலைப்படுவதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை கொண்டு வரும் லாரிகளை மடக்கி பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தால், விவசாயப் பணிக்கு எடுத்து செல்வதாக கூறி விட்டு ஹோட்டல்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சில தனியார் பள்ளி, கல்லூரிகள்  தண்ணீர் லாரிகளை சொந்தமாகவே வைத்துள்ளனர். இந்த தண்ணீரை தான் விடுதி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சுகாதாரமற்ற தண்ணீரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் விநியோகிக்கும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு