×

தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகிய பாக்கு மரங்கள்

தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி அருகே, தண்ணீர் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் கருகி மொட்டையாகி வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் நெல், மஞ்சள், கரும்பு, வாழை ஆகியவற்றுக்கு அடுத்த படியாக காய்கறிகள் பரவலாக பயிரிடப்படுகின்றன. தற்போது, நீண்ட காலம் பலனளிக்கும் பாக்கு மர வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு அணை, வரட்டாறு வள்ளிமதுரை அணை, பாலக்கோடு பஞ்சப்பள்ளி அணை பகுதிகளில் பாக்கு மரத்தோப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில், கடும் வறட்சி நிலவி வருவதால், போதிய நீரின்றி பாக்கு மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. தர்மபுரி தோக்கம்பட்டியில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பாக்கு மரங்கள் காய்ந்து கருகி மொட்டையாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், போதிய தண்ணீர் இன்றி பாக்கு மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. நூற்றுக்கணக்கான மரங்கள் கருகியதால், நடப்பாண்டு பாக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...