×

மனுதாக்கல் 2வது நாள் வேட்பாளர்கள் வராததால் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியது

திருவாரூர், மார்ச் 21: நாகை எம்.பி தொகுதியில் 2வது நாளான நேற்றும் வேட்பு மனு தாக்கல் எதுவும் நடைபெறாமல் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் திருவாரூர் இடைதேர்தலுக்கும் மனு தாக்கல் நடைபெறவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 எம்.பி தொகுதிகள் மற்றும் திருவாரூர் உட்பட 18 எம்.எல்.ஏ தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஆகியவை அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. அதன்படி நாகை  எம்.பி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகமாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் இருந்து வரும் நிலையில்  இந்த அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தொகுதியின் தேர்தல் அலுவலர் ஆனந்த் தலைமையில்  செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் முதல் நாளான  நேற்று முன்தினம்  எவரும் மனு தாக்கல் செய்யாத நிலையில்  இந்த அலுவலகமானது வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் 2வது நாளான நேற்றும் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யாததால் 2வது நாளாகவும் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியின் இடைதேர்தல் நடத்தும் அலுவலகமாக தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஒ அலுவலகம் இருந்து வரும் நிலையில் இங்கு நேற்று முன்தினம் சுயேட்சையாக ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்த நிலையில் 2வது நாளான நேற்று எவரும் மனு தாக்கல் செய்யாததால் இந்த அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பவுர்ணமி தினமான நேற்றே மனு தாக்கல் இல்லாத நிலையில் இன்று பிரதமை என்பதால் இன்றும் மனு தாக்கல் இருப்பதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என்பது குறிப்பிடதக்கது.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...