லாஸ்பேட்டையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, மார்ச் 21: கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை தீர்த்துக் கட்ட லாஸ்பேட்டையில் ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுவை லாஸ்பேட்டை சத்யா சிறப்பு பள்ளி பின்புறம் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக லாஸ்பேட்டை மற்றும் சிறப்பு அதிரடிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை அங்கு நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அங்குள்ள ஒரு இருட்டு பகுதியில் 12 பேர் கொண்ட கும்பல் பதுங்கியிருந்த நிலையில், போலீசாரை கண்டதும் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதில் 3 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை சோதனையிட்டனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள், 2016ல் கொலை செய்யப்பட்ட மடுவுபேட் முரளியின் ஆதரவாளர்களான நெருப்புக்குழி சேகர் என்ற முத்துசேகர் (30), மடுவுபேட் வெங்கடேசன் (24), புதுசாரம் கவுதமன் (24) என்பது தெரியவந்தது. மடுவுபேட் முரளியின் உறவினரான ரவுடி பார்த்திபன் தலைமையில் 12 பேர் கும்பல் எதிரிகளை பழிதீர்க்கும் வகையிலும், மேலும் வழக்கு விசாரணை செலவுக்கு பணம் தேவைப்படுவதால் அந்த வழியாக செல்லும் தொழிலதிபர்களை கத்திமுனையில் மிரட்டி கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. மேலும், மடுவுபேட் முரளி கொலை வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள பிரபல ரவுடி அண்ணாதுரையை கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வரும்போது அவரை கொலை செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தப்பிஓடிய மேலும் 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: