வேட்புமனு தாக்கல் 2வது நாளாக மந்தம்

புதுச்சேரி, மார்ச் 21:  புதுவைநாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்களை வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அருண் பெற்று வருகிறார். இதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை விவிபி நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் ஸ்மித்தா  பெற்று வருகிறார். பிரதான கட்சியான காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், சுயேட்சைகள் மட்டும் தற்போது வேட்பு மனுவை அளித்து வருகின்றனர். முதல் நாளான நேற்று முன்தினம், மக்களவை தொகுதியில் போட்டியிட அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கூடப்பாக்கம் மாற்றுத்திறனாளி அருணாசலம் என்பவர் மட்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. நேற்று 2வது நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய சுயேட்சைகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் மனுதாக்கலுக்கு வரவில்லை. அதேவேளையில் 25க்கும் மேற்பட்டோர் அலுவலகம் வந்து மனுக்களை மட்டும் வாங்கி சென்றனர். இதனால் வேட்பு மனு தாக்கலில் மந்த நிலையையே காணமுடிந்தது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் மனுதாக்கல் சூடுபிடிக்கும் என தெரிகிறது. புதுவையில் 2 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதால் துணை ராணுவத்தினரும், போலீசாரும் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: