இ.கம்யூ. நிர்வாகிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

புதுச்சேரி, மார்ச் 21: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நேற்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். இதையடுத்து, அவரது பதவி பறிக்கப்பட்டு, தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மக்களவை தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சேதுசெல்வம் 2ம் இடம் பிடித்திருந்தார். இதனால் மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ., திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்திய கம்யூ., இடம்பெற்றுள்ள காங்.-திமுக கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கம்யூ., கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூ., அலுவலகத்துக்கு கடந்த 17ம் தேதி  முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சென்றனர். அங்கு இந்திய கம்யூ., கட்சி தலைவர்களை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 அதைத் தொடர்ந்து, 17, 18 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூ., நிர்வாகக்குழு கூட்டமும், 19ம் தேதி மாநிலக்குழு கூட்டமும் நடந்தது. இந்த கூட்டத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூ., தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை அக்கட்சியின் மத்திய குழு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மத்திய குழு ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணி குழு நிர்வாகிகளும், மாநில அமைப்பாளர்களுமான சிவா எம்எல்ஏ, எஸ்பி சிவக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் சி.பி.திருநாவுக்கரசு, தெற்கு மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்றனர். அங்கு இந்திய கம்யூ., கட்சியின் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் அதிப் பாஷா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், துணை செயலாளர் கீதநாதன், அபிஷேகம் உள்ளிட்டோரை சந்தித்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, தனித்து போட்டியிடும் முடிவை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். மேலும், திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீமிடம் கேட்டபோது, திமுகவின் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் எங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்து மத்திய குழு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். இதுதொடர்பாக அவர்கள் விவாதித்து தகவல் கூறுவார்கள். அதைத் தொடர்ந்து, நாளை (இன்று) காலை மீண்டும் மாநில குழு கூட்டம் நடைபெறும். அதன் பின்னர் இறுதி முடிவை தெரிவிப்போம் என்றார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுமா? அல்லது திமுகவை ஆதரிக்குமா? என்ற கேள்விக்கு இன்று முடிவு தெரிந்து விடும்.

Related Stories: