சொந்த ஊரில் நெல்லை தொகுதி திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

பணகுடி, மார்ச் 21:  நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சா.ஞானதிரவியம் போட்டியிடுகிறார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நேற்று காலை நெல்லை திரும்பினார். தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் ஞான திரவியத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது சொந்த கிராமமான ஆவரைகுளத்தில், மேளதாளம் முழங்க கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் வேட்பாளர் ஞான திரவியத்துக்கு வரவேற்பு கொடுத்தனர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், மீனவரணி செயலாளர் எரிக்ஜூடு, ஊராட்சி செயலாளர்கள் ஆவரைகுளம் இளங்கோ கலைசிகாமணி, அடங்கார்குளம் பாலகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர்கள் கோபி, தில்லை, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவரது தந்தை சாமியடியான் செல்லத்துரையிடம் ஆசி வாங்கிவிட்டு கிராம மக்களிடம் பேசினார். அப்போது ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முத்தாரம்மன் கோயில், தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். முன்னதாக நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் நாங்குநேரி ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி வேல்சாமி. வில்சன், ஜெயபால் மற்றும் காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் பண்டாரம், நகர தலைவர் சுடலைக்கண்ணு, மகிளா காங்கிரஸ் வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். வள்ளியூரில் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஞான திரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories: