×

வடலூர் பகுதியில் வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்

குறிஞ்சிப்பாடி, மார்ச் 21: தமிழகத்தில் ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயில் சுட்டெரிக்க துவங்கியது. பொதுமக்கள் வெயிலால் வெளியில் வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க தர்பூசணி, வெள்ளரி பழம், வெள்ளரி பிஞ்சு மற்றும் பழங்களை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடுவர். இதற்காக, காலங்களுக்கு ஏற்றாற்போல், தர்பூசணி, வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வடலூர் அடுத்த மருவாய், ஓணாங்குப்பம், சேராக்குப்பம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தங்களின் நிலங்களில் தற்போது வெள்ளரி பிஞ்சு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாற்பது நாள் பயிரான வெள்ளரி பிஞ்சு தை மாதம் விதைக்கப்பட்டு, மாசி மாதம் அறுவடை செய்யப்படுகிறது.

இந்த செடிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., போன்ற உரங்கள் போட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த பயிர் மழை இல்லாமல் இருந்தால், மாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை அறுவடை செய்யப்படும். மழை இருந்தால் செடி அழுகி விடுவதால், அறுவடை ஓரிரு மாதம் வரை மட்டுமே செய்யப்படுகிறது. சாலையோரங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளரி பிஞ்சை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். இந்தாண்டு மழையின்றி காணப்படுவதால், அறுவடை தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

Tags : area ,Vellalur ,selling ,
× RELATED கோவை அருகே குப்பை கிடங்கில் 3-வது நாளாக...