×

விருத்தாசலத்தில் பரபரப்பு சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம், மார்ச் 21: விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாலியல் சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் அனைத்து கட்சி சார்பில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் சேகர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், சிபிஎம் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் தனவேல், புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி மாவட்ட செயலாளர் மணியரசு, மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உண்மைக்குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும்.

 வழக்கின் விசாரணையை உயர்நீதி மன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் நடத்திட வேண்டும், பொள்ளாச்சி பெண்கள் பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளை பாதுகாத்து வரும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கடலூர் மெயின் ரோட்டிலிருந்து சார் ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சார் ஆட்சியர் பிரசாந்த் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்குமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : siege ,Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு