×

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

கோவில்பட்டி, மார்ச் 21:  நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்திட வலியுறுத்தி கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் 100 சதவீதம் வாக்களித்திட வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.  ஆர்.டி.ஓ.அமுதா தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் முன்னிலையில் பஸ்நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகள் மற்றும் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் தேர்தல் வாக்குபதிவு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகளிடம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் தாசில்தார் பரமசிவன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு