×

வாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்காளர்களிடம் கெடுபிடி காட்டக் கூடாது

காரைக்கால், மார்ச் 21: வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது, பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டக்கூடாது. என, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த்ராஜா போலீசார் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தினார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் துறை சார்பில், காரைக்கால் டணால் தங்கவேலு கலையரங்கில், காரைக்காலில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான நன்னடத்தை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி ராகுல் ஆல்வா முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் எஸ்.எஸ்.பி ராகுல் ஆல்வா பேசியது: காவலர்களின் பங்கு இந்த தேர்தலில் மிக முக்கியமானது. அரசியல் சார்பில் நடந்து கொள்ளக்கூடாது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாட்ஸ் அப் போன்ற சமூக குழுக்களில் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை பதிவு செய்யக் கூடாது. மாவட்ட எல்லையில் வாகன சோதனையின்போது, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் செய்ய வேண்டும்.

எந்த பொருளை பறிமுதல் செய்தாலும், வீடியோ ஆதாரம் முக்கியமானது. அரசியல் கட்சியினர் ஒலிபெருக்கியை காலை 6 முதல் இரவு 10 மணி வரை தான் பயன்படுத்த வேண்டும். பிரசாரத்துக்கு 10 வாகங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு வண்டியில் ஒரு கொடிதான் பறக்க வேண்டும். அதுவும் ஒரு அடிக்கு அரை அடி அளவில் தான் இருக்க வேண்டும். மீறினால் தேர்தல் நடத்தை விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவுறுத்த வேண்டும். பிரசாரத்தின் போது அன்பளிப்புகள் வழங்க கூடாது. தொப்பி மட்டும் வழங்கலாம். காவலர்கள் இதை அனைத்தையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசியது: தேர்தல் பணியாற்றும் பொழுது காவலர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். கட்சி பாகுபாடு பார்க்ககூடாது. எந்த ஒரு கட்சிக்கும் சார்புநிலை காட்டக்கூடாது. வாக்குப்பதிவு அறை உள்ளே செல்லக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரி அழைத்தால் மட்டுமே செல்ல வேண்டும். வாக்குப் பதிவிற்கு வரும் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டக்கூடாது. முதியோர், இயலாதவர்களுக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. காவலர்களோ வேறு யாரேனும் தவறு செய்தால், அந்த ஆதார அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகள் படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  கூட்டத்தில், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், போலீஸ் எஸ்.பி மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.

Tags : voting ,voters ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...