×

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மனைவியுடன் தொழிலதிபரை கட்டிப்போட்டு 20 சவரன் நகை, பணம் கொள்ளை 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

திருப்பத்தூர், மார்ச் 21: திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மனைவியுடன் தொழிலதிபரை தாக்கி, கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு 20 சவரன் நகை, பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி வன்னியர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(60). இவரது மனைவி காளியம்மாள்(45). முருகன் கரும்பு ஆலை மற்றும் வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர்களுக்கு தனஞ்ஜெயன், தனசேகரன், தமிழ்ச்செல்வன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் தனசேகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னையில் பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். தனஞ்ஜெயன் மட்டும் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனால், முருகன் அவரது மனைவி காளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் கரும்பு அரவை வேலைகளை முடித்துவிட்டு தம்பதி இருவரும் கோடை வெயில் காரணத்தினால் காற்றோட்டமாக இருக்க கதவை திறந்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தபோது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே நுழைந்து உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது. பின்னர், கத்தியை காட்டி சத்தம் போட்டால் உங்களை குத்தி கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு சராமாரியாக முகத்தில் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை அந்த மர்ம நபர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன இருவரும் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், கம்மல் ஆகியவற்றை கழற்றி கொடுத்துள்ளனர். மேலும் பீரோ சாவியை கொடுக்கும் படி கேட்டுள்ளனர். அதற்கு எங்களிடம் இல்லை என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.

அப்போது, அந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் பீரோ சாவி இருந்த இடத்தையும் கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த பீரோவில் இருந்த ₹11 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் என மொத்தம் 20 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொண்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். மேலும், சத்தம் போடாமல் இருக்க இருவரின் வாயில் துணியை அடைத்து உள்ளனர். பின்னர், காளியம்மாள் கையில் கட்டிய துணியை அறுத்து வாயில் இருந்த துணியை எடுத்து கீழே போட்டு விட்டு ஜன்னல் வழியாக சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பேரும் கை, கால்கள் கட்டிய நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சம்பவம் நடந்த இடத்தை திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட காளியம்மாளிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : house ,owner ,Tirupattur ,
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...