×

மக்களவை தேர்தல் எதிரொலியால் நன்னடத்தை கைதிகள் விடுதலை நிறுத்தம் சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 21: மக்களவை தேர்தல் காரணமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், 60 வயது கடந்த ஆயுள் தண்டனை பெற்று 5 ஆண்டுகள் தண்டனை அனுபவித்திருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் நன்னடத்தை கைதிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு 1500 கைதிகள் விடுதலை செய்யலாம் என்று சிறை நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நன்னடத்தை கைதிகள் பல கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வந்தனர்.

இதுவரை சுமார் 1100க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறைகளில் 350க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் நன்னடத்தை கைதிகள் விடுதலையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி சிறைத்துறையினருக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சிறைகளில் உள்ள 1100க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த டிசம்பர் மாதம் வரை விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நன்னடத்தை கைதிகளின் விடுதலை குறித்து அரசிடம் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பால், கைதிகள் விடுதலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்து, மே மாதத்திற்கு பிறகு கைதிகள் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Tags : Prison officials ,prisoners ,release ,Lok Sabha ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...