×

வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிகளில் சோதனையின்போது எடுக்கப்படும் வீடியோவை எடிட் செய்யாமல் வழங்க வேண்டும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் உத்தரவு

வேலூர், மார்ச் 21: வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிகளில் சோதனையின்போது எடுக்கப்படும் வீடியோவை எடிட் செய்யாமல் வழங்க வேண்டும் என்று தேர்தல் செலவின பார்வையாளர்கள் உத்தரவிட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மக்களவை தொகுதிக்கு உஜ்வால்குமார், ரவிகாந்த், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு யாதுவீர்சிங், ஹரிஸ்குமார் ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தலைமையில் தேர்தல் செலவினம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பறக்கும்படை நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர், வீடியோ மேற்பார்வை குழுவினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேட்பாளர்களின் செலவினங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். உதாரணத்திற்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போடப்படும் இருக்கைகளின் எண்ணிக்கையும், வேட்பாளர்கள் தங்களது கணக்கில் தெரிவிக்கும் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் வீடியோ பதிவு செய்யும் போது ஆடியோ பதிவாவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தவிர்க்கும் வகையில் குரல் பதிவோடு வீடியோ எடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் சோதனையின்போது எடுக்கப்படும் வீடியோவை எடிட் செய்யாமல் வழங்க வேண்டும் என்று குழுவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது கண்காணிப்பு குழுவினர், ‘வீடியோ கண்காணிப்பு குழுவில் போலீசார் இல்லை. இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே வீடியோ கண்காணிப்பு குழுவில் போலீசாரும் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,constituencies ,Arakkonam ,Lok Sabha ,
× RELATED வாக்களித்தவர்களில் பெண்களே அதிகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில்