திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம்

திருப்பூர், மார்ச் 20: குடிநீர் விநியோகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு கமிஷனர் சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி தனி அதிகாரியும், கமிஷனருமான சிவகுமார் தலைமை வகித்து பேசியதாவது:

‘‘கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு சீரான குடிநிர் விநியோகம் செய்திட வேண்டும். குழாய் ஆய்வாளர்கள் அவ்வப்போது மாநகரில் ஏற்படும் குழாய் உடைப்புகளை சரி செய்து பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட உதவி பொறியாளர்களுடன் இணைந்து செயல் பட வேண்டும். அவ்வப்போது ஒவ்வொரு மண்டலங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் மற்றும் குழாய் ஆய்வாளர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து குடிநீர் விநியோகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்திட முன் வர வேண்டும். மின்னழுத்த குறைபாடுகளை கண்டறிந்து மின்வாரிய அலுவலருடன் தொடர்பு கொண்டு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பொது மக்களுக்கு குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திட எடுத்துரைக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார். இதில், செயற்பொறியாளர் திருமுருகன், மண்டல உதவி ஆணையாளர்கள் செல்வநாயகம், வாசுகுமார், முகமது சபியுல்லா, கண்ணன், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், குழாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: